சனிக்கிழமை
11.39 AM
நவராத்திரி நிறைவடைந்து விஜயதசமி வரும்போதெல்லாம், அன்னை துர்கா மகிஷாசூரனை வதம் செய்த கதைகள் பக்திப் பெருக்குடன் பேசப்படுகின்றன. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டிய அன்னையின் வீரத்தைப் போற்றுகிறோம்.
அன்று அன்னை நேரில் வந்து அசுரனை அழித்தான் என்பது உண்மையெனில், இன்று நம் கண்முன்னே உலவும் அசுரத்தனங்களை அழிக்க அன்னை ஏன் வரவில்லை?
இன்றைய அசுரர்களுக்கு கொம்புகளும் கோரைப் பற்களும் இல்லை. அவர்கள் நம்மிடையே மனித உருவில் வாழ்கிறார்கள். அதிகாரத்திலும் பணத்திலும் செல்வாக்கிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.
இவர்களும் அசுரர்கள் இல்லையா?
கல்வி மற்றும் மருத்துவக் கொள்ளையர்கள்: கல்வியை வணிகமாக்கி, ஏழை எளிய மாணவர்களின் கனவுகளைக் கட்டணச் சுமையால் நசுக்கும் கல்வி நிறுவனங்களும், நோயாளிகளின் துயரத்தையும் உயிரச்சத்தையும் பணமாக்கும் மருத்துவ வணிகமும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டாமா?
இணையத்தின் இருளில் பதுங்கியிருப்பவர்கள்: மக்களின் அறியாமையையும் நம்பிக்கையையும் பயன்படுத்திப் பணத்தைப் பறிக்கும் இணையக் குற்றவாளிகளும், பெண்களை ஏமாற்றி அந்தரங்கக் காணொளிகளால் மிரட்டும் காமுகர்களும் தண்டிக்கப்பட வேண்டாமா?
உறவுகளின் பெயரில் உயிரைப் பறிப்பவர்கள்: பணத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் கணவன் அல்லது மனைவியைக் கொல்லத் திட்டமிடுபவர்கள், கூலிப்படைகளை ஏவுபவர்கள், நம்பிக்கையையும் அன்பையும் ஆயுதமாக்கி உயிர்களைப் பறிப்பவர்கள் — இவர்களின் கொடூரத்தை எந்தச் சொல் கொண்டு வருணிப்பது?
சாதியின் பெயரால் கொலை செய்பவர்கள்: காதலித்ததற்காகவும், தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் மனித உயிர்களைப் பறிக்கும் சாதிவெறியர்கள், பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள், பெண்களின் விருப்பத்தையும் உரிமையையும் மதிக்க மறுப்பவர்கள் — இவர்களின் அநீதிக்கு முடிவு எப்போது?
அதிகாரச் சுரண்டல்களும் நச்சுப் பிரச்சாரங்களும்: பொதுவெளியில் அறத்தைப் போதித்துவிட்டுப் பின்னால் சுரண்டல்களில் ஈடுபடுவோர் ஒருபுறம்; சமூக வலைதளங்களில் நஞ்சைக் கக்குபவர்கள் மறுபுறம். பதவியும் முகமூடியும் இவர்களைக் காப்பாற்றிவிடுமா?
இவர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் மதிப்பிட முடியாது. ஆனால், பிறருடைய வாழ்வையும் உரிமையையும் சிதைக்கும் அநீதியை அழிப்பதில் இருந்து அம்பாள் விடுப்பு எடுத்துக் கொண்டாளா?
புராணமும் உண்மையும்
பழம்புராணங்களைக் கொண்டாடுவதால் புதிய மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. அதேசமயம் தெய்வ நம்பிக்கையும் தெய்வ வழிபாடும் பொய் என்றும் சொல்லவில்லை.
ஒரு வழிபாடு அல்லது விழா என்பது கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கு மட்டுமல்ல. அதன் பின்னாலிருக்கும் உண்மையை அறிந்துகொண்டு, தற்போது நடைமுறை வாழ்விற்குப் பொருந்துகிறதா எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எது எப்படியோ…
அன்று வந்த துர்கை இன்று ஏன் வரவில்லை? தெய்வங்கள் Temporary-யா அல்லது Bond முடிந்து விட்டதா?
M.Porkodi Nangai
Tamil writer & Author

குரு வாழ்க குரு நன்றாய் வாழ்க குருவே துணை...
ReplyDeleteஎழுத்து நடையும், எண்ண ஓட்டமும், எழுப்பிய கேள்வியும் சிறப்பு சிறப்பு. பற்பல கேள்விகளுக்கு இந்த பூமியில் பதில் இல்லை! எனினும் இந்த பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கையை இழக்காமல் வழிப்பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDelete