04/10/26
10.29PM
இன அழிப்பில் உருவான மொழி_ ஆங்கிலம்
இன்று உலகளாவிய இணைப்பு மொழியாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தேவையாகவும் மாறிப்போயிருக்கிறது ஆங்கில மொழி (English). ஆங்கிலம் பேசுபவர்களை அறிவாளிகளாகவும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களைக் கௌரவம் குறைந்தவர்களாகவும் பார்க்கும் ஒரு போலிச் சூழல் இன்று நம் சமூகத்தில் நிலவுகிறது. ஆனால், உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த ஆங்கில மொழி எப்படிப் பிறந்தது? அதன் பின்னணியில் இருக்கும் உண்மையான அதிகார அரசியல் என்ன? என்பதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
இங்கிலாந்தின் பூர்வகுடிகள்
விரட்டப்பட்ட வரலாறு
ஆங்கிலம் என்பது இங்கிலாந்து நிலப்பரப்பில் இயற்கையாகத் தோன்றிய ஒரு மென்மையான மொழியல்ல. கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, இங்கிலாந்து தீவுகளில் வாழ்ந்த உண்மையான பூர்வகுடிகள் கெல்ட்டிக் மக்கள் (Celtic Britons) ஆவர். அவர்கள் பேசியது 'கெல்ட்டிக்' என்னும் தொன்மையான மொழி.
கி.பி. 450 வாக்கில், இன்றைய ஜெர்மனி மற்றும் டென்மார்க் பகுதிகளில் இருந்து ஆங்கிள்ஸ் (Angles), சாக்சன்ஸ் (Saxons), மற்றும் ஜூட்ஸ் (Jutes) என்ற ஆயுதம் ஏந்திய ஜெர்மானியப் பழங்குடியினர் பிரிட்டன் தீவுக்குள் அத்துமீறி நுழைந்தனர். வந்தவர்கள் அங்கிருந்த கெல்ட்டிக் பூர்வகுடி மக்களைக் கடுமையாக ஒடுக்கி, அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்தனர்.
உயிர் பிழைத்த பூர்வகுடிகள் தங்களின் சொந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, மலைப் பகுதிகளான வேல்ஸ், ஸ்காட்லாந்து எல்லைகளுக்குத் தப்பியோடினர்.
பூர்வகுடிகளை வீழ்த்திய பின்,இங்கிலாந்தைக் கைப்பற்றிய ஜெர்மானிய பழங்குடியினரான ஆங்கிள்ஸ் (Angles) என்பவர்கள்தான் தங்களுடைய ஜெர்மானிய மொழியை அங்கு நிலைநாட்டினர். இவர்களின் பெயரிலிருந்தே 'Englisc' (English) என்ற மொழியும், 'Englaland' (England) என்ற நாடும் உருவானது. சுருக்கமாகச் சொன்னால், ஆங்கிலம் என்ற மொழி பிறந்ததே இங்கிலாந்து பூர்வகுடிகளின் வீழ்ச்சியிலும் இடப்பெயர்விலும் தான்!
ஆங்கிலத்தின் உண்மையான வேர்கள் (ஜெர்மானிய மூலக்கூறு)
இன்று பலரும் லத்தின் மொழிதான் ஆங்கிலத்தின் மூல மொழி என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஆங்கிலத்தின் உண்மையான வேர்கள் ஜெர்மானிய (Germanic) மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பு (Grammar) மற்றும் நாம் அன்றாடம் மிக அதிகமாகப் பயன்படுத்தும் மிக முக்கியமான அடிப்படை வார்த்தைகள் (உதாரணமாக: I, you, go, water, eat, mother) எல்லாமே அந்தப் பழங்கால ஜெர்மானிய மொழியிலிருந்து வந்தவைதான். பிற்காலத்தில் பிரெஞ்சு மற்றும் லத்தின் மொழிகளின் சொற்கள் ஆக்கிரமித்திருந்தாலும், ஆங்கிலத்தின் ஆதி ஆன்மா ஜெர்மானியப் பழங்குடிகளின் மொழியிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்ட மொழி
இங்கிலாந்தில் பூர்வகுடிகளை ஒடுக்கி உருவான ஆங்கிலம், பிற்காலத்தில் உலக நாடுகளின் பூர்வகுடிகளை அழித்துத் தன் ஆதிக்கத்தைப் பரப்பியது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா
17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து குடியேறியவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளைக் கைப்பற்றினர். அங்கிருந்த செவ்விந்தியர்கள் (Native Americans) மற்றும் அபாரிகினல் (Aborigines) பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களின் தாய்மொழிகளைப் பேசத் தடை விதித்து, அவர்களைக் கட்டாயமாக ஆங்கிலமயமாக்கினர்.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா (கல்வித் திணிப்பு):
நம்மைப் போன்ற தொன்மையான மொழிகளைக் கொண்ட நாடுகளில், பிரிட்டிஷார் தங்களின் ஆட்சி அதிகாரம் மற்றும் வணிகம் மூலமாக ஆங்கிலத்தைக் கொண்டு வந்தனர். 1835-ல் மெக்காலே பிரபு கொண்டு வந்த கல்வி முறை மூலம், "ஆங்கிலம் படித்தால் மட்டுமே பிழைக்க முடியும், அரசு வேலை கிடைக்கும்" என்ற அடிமைத்தனத்தின் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கினர்.
கணினிப் புரட்சியும் இன்றைய நவீன ஆதிக்கமும்
பிரிட்டிஷ் பேரரசு உலகை விட்டு வெளியேறிய பிறகும் ஆங்கிலம் நம் உயிரை வாங்குவதற்குக் காரணம் அதன் தனித்துவமான சிறப்பு கிடையாது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கமும், நவீன உலகை மாற்றியமைத்த கணினி, இணையம் (Internet) போன்ற தொழில்நுட்பப் புரட்சிகள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே உருவானதும் தான் காரணம். உலகமயமாக்கல் காரணமாக அது ஒரு தவிர்க்க முடியாத உலகளாவிய இணைப்பு மொழியாக (Lingua Franca) மாறிப் போனது.
நம் சிந்தனைக்கான விடுதலை!
சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களின் தாய்மொழியிலேயே அறிவியல், மருத்துவம், மற்றும் கணினியைக் கற்கின்றன. அவர்கள் ஆங்கிலத்தை வெறும் ஒரு தொடர்பு மொழியாக மட்டுமே பார்க்கிறார்களே தவிர, நம் ஊரைப் போல அதை அறிவின் அடையாளமாகவோ அல்லது கௌரவமாகவோ பார்ப்பதில்லை.
ஆங்கிலத்தை ஒரு "கருவியாக" மட்டும் பார்த்துவிட்டு, நம் சிந்தனையையும், உணர்வையும் நம் தாய்மொழியிலேயே வைத்திருக்கும் போதுதான் இந்த மொழியாதிக்கத்தில் இருந்து நாம் உண்மையாக விடுதலை பெற முடியும்.
M.Porkodi Nangai
Tamil writer & Author







Comments
Post a Comment