ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை
11.58
ரக்ஷா பந்தன் — தமிழர்களுக்குத் தேவையா?
தமிழர்களின் வாயில் நுழையாத
வீட்டு வாயில்கூட நுழைந்து விடக் கூடாத பெயரும் பண்பாடும்
தமிழினத்திற்கு தேவையா?
நாகரிகம் என்ற சொல்லுக்கு உலக நாடுகள் அகராதி தேடிக் கொண்டிருந்த காலத்திலேயே, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக மக்களைத் தன் தொப்புள்கொடி உறவுகளாக அறிவித்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு. உறவுகளுக்கு இலக்கணமும், ஒழுக்கத்திற்கு எல்லையும் வகுத்து வாழ்ந்த பண்பாடு நம் தமிழர் பண்பாடு.
பெண்ணை மதிப்பதும், உறவுகளைப் போற்றுவதும், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதும் தமிழர்களுக்கு நேற்று வந்த கருத்துகள் அல்ல. அவை நம் இலக்கியங்களிலும், வாழ்வியலிலும், சமூக நினைவிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பதிவாகி வந்துள்ள பண்புகள்.
ஆனால், சமீபகாலமாக இங்குள்ள சில ஊடகங்களும், விளம்பர நிறுவனங்களும் வடஇந்தியப் பண்பாட்டில் நிலவும் ‘ரக்ஷா பந்தன்’ என்ற சடங்கை, ஏதோ உலகளாவிய பாசத்தின் அடையாளம் போலவும், சகோதரன்–சகோதரி உறவை உறுதிப்படுத்துவதற்கான அவசியமான விழா போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றன.
ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:
கையில் கட்டப்படும் ஒரு கயிறுதான் பாசத்தைத் தீர்மானிக்குமா?
சகோதரியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கயிறைக் கட்டிய பிறகுதான் பிறக்க வேண்டுமா? பெண்ணை மதிக்க வேண்டும் என்ற மனப்பண்பு, ஒரு சடங்கின் மூலம் மட்டுமே உருவாகுமா?
சடங்கு இருக்கலாம்; ஆனால் சடங்கைவிட மேலானது மனப்பண்பாடு.
தமிழர்களுக்கு பெண்களை மதிப்பதற்கும், சகோதர உறவைப் போற்றுவதற்கும் புதிதாக ஒரு கயிறையோ, புதிதாக ஒரு நாளையோ இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மெரினாவில் நிரூபிக்கப்பட்ட தமிழனின் மனக்கட்டுப்பாடு!
ஒரு சமூகத்தின் உண்மையான நாகரிகத்தை அதன் சடங்குகள் மட்டும் நிரூபிப்பதில்லை. அந்த சமூகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் அதன் நாகரிகத்தின் உண்மையான அளவுகோல்.
அதற்கு உலகம் பார்த்த மிகச் சிறந்த சமகால உதாரணங்களில் ஒன்று — மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம்.
லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும், மாணவர்களும் எந்த ஒரு தனித் தலைவனின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், அரசியல் பின்னணியின்றி, அறவழியில் இரவும் பகலும் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று கூடிப் போராடினார்கள்.
கொட்டும் பனியிலும், நள்ளிரவிலும், ஆண்களும் பெண்களும் அருகருகே அமர்ந்து, பல நாட்கள் ஒன்றாகப் போராடிய அந்தப் பெருங்கூட்டத்தில், பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் காக்க எந்த ‘ரக்ஷா பந்தன்’ கயிறும் தேவைப்படவில்லை.
அங்கு ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை “யாரோ ஒருவரின் சகோதரி” என்று பார்த்ததால் மட்டும் அல்ல; அவள் ஒரு மனிதர், அவளுக்கும் கண்ணியம் உண்டு, பாதுகாப்பாக வாழும் உரிமை உண்டு என்ற அடிப்படை மனித உணர்வினாலேயே அவளை மதித்தான்.
அது கையில் கட்டப்பட்ட கயிற்றால் உருவான ஒழுக்கம் அல்ல.
மனதில் இருந்த கட்டுப்பாட்டால் உருவான ஒழுக்கம்.
அதுதான் ஒரு சமூகத்தின் உண்மையான நாகரிகம்.
ஒரு பெண்ணை மதிக்க, அவள் நம் சகோதரி என்று முதலில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் ஒரு மனிதர் என்பதே போதுமான காரணம்.
எனவே, தமிழர்களுக்கு பெண்களை மதிப்பதையும், சகோதர பாசத்தையும் கற்றுக்கொடுக்க புதிதாக எந்த ஒரு சடங்கையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
நம் மண்ணுக்கு ஏற்கனவே ஒரு நீண்ட பண்பாட்டு வரலாறு இருக்கிறது.
உறவுகளை மதிக்கவும், பெண்களை கண்ணியமாக நடத்தவும், பிற மனிதர்களைத் தம்மைப் போலவே பார்க்கவும் கற்றுக் கொடுத்த மண் இது.
அதனால் ரக்ஷா பந்தனை எதிர்ப்பது யாருடைய பண்டிகையையும் இழிவுபடுத்துவதற்காக அல்ல.
தமிழர்களின் பண்பாட்டில் ஏற்கனவே உள்ள ஒரு உயர்ந்த மனிதநேயத்தை, வெளியில் இருந்து வரும் ஒரு சடங்குதான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது என்ற தவறான மனநிலையை மட்டுமே நாம் கேள்வி கேட்கிறோம்.
கையில் கயிறு கட்டிக்கொள்வது அவரவர் விருப்பமாக இருக்கலாம்.
ஆனால், பெண்ணை மதிப்பது ஒரு நாள் கொண்டாடும் சடங்காக அல்ல; ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறியாக இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான பாதுகாப்பு.
அதுதான் உண்மையான சகோதரத்துவம்.
அதுதான் உண்மையான நாகரிகம்.
ஆகவே தமிழினம் எப்போதும் தன்னுடைய ஆழமான விழுமியங்களை, சங்க இலக்கியங்கள் போற்றிப் பாடிய அகப்பொருள் வாழ்வியல் பற்றிய பெருமைகளை நினைவில் கொள்ளாமல் பிற இனத்தவரைப் பார்த்து காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்!!
M.Porkodi Nangai
Tamil writer & Author

Comments
Post a Comment