மனிதர்களின் பார்வையில் காக்கைகளின் சில செயல்கள் கொடூரமாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் வலுவான அறிவியல் காரணங்கள் உள்ளன. பறவைகளிலேயே காக்கைகளுக்கு நினைவாற்றல் மிக அதிகம்.
வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காக்கைகள் தங்களுக்குக் கெடுதல் செய்யும் மனிதர்களின் முகங்களை ஐந்து ஆண்டுகள் வரை துல்லியமாக நினைவில் வைத்திருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எப்போதாவது ஒரு காக்கையைக் கல்லால் அடித்திருந்தால், அது அந்த முகத்தை மனதில் பதித்துக்கொண்டு, அடுத்த முறை பார்க்கும் போது தலையிலேயே குறி வைத்துக் கொடூரமாகக் கொத்தும் இயல்புடையது.
அதேபோல, காக்கைகள் சாதுவான பறவைகள் அல்ல; அவை அனைத்துண்ணி வாழ்க்கை முறையைக் கொண்டவை. மரத்தில் இருக்கும் அணில் குஞ்சுகள், சிறிய குருவிகள், புறாவின் முட்டைகள் ஆகியவற்றை வேட்டையாடித் தின்னும். இது காக்கையின் குரூர குணம் அல்ல, காட்டில் வாழும் புலி மான் குட்டியை வேட்டையாடுவது போன்ற அதன் உயிர்பிழைப்பு உத்தி மட்டுமே.
மேலும், கழுகு, பருந்து, ஆந்தை அல்லது பூனைகளால் ஆபத்து என்று தெரிந்தால், ஒரு காக்கை கத்தும் சத்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான காக்கைகள் நொடிப் பொழுதில் ஒன்று கூடிவிடும். எதிரி எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணித் தாக்குதல் நடத்தித் துரத்திவிடும்.
இவ்வளவு சுயநலமான வேட்டை குணம் கொண்ட ஒரு பறவையைத்தான் நம் ஊரில் இறந்த முன்னோர்கள் வடிவில் வருகிறது என்று கூறி, தினமும் சாதம் வைத்து வழிபட்டு வருகிறார்கள். ஆனால், காக்கையை முன்னோராகக் கருதி வழிபடும் வழக்கம் பழந்தமிழர் மரபில் கிடையவே கிடையாது.
வடமொழிப் பண்பாட்டில் எம தர்ம ராஜனின் தூதுவனாகக் காக்கை கருதப்படுகிறது. பிதுர் லோகத்தில் இருக்கும் இறந்த முன்னோர்கள் காக்கையின் வடிவத்தில் வந்து உணவை ஏற்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சாணக்யரின் அர்த்தசாஸ்திரம் மற்றும் கருட புராணம் போன்ற நூல்களில்தான் இந்த பிதுர் காரியங்கள் மற்றும் காக்கை வழிபாடு விரிவாகப் பேசப்படுகிறது. பிற்காலத்தில் வடமொழித் தாக்கம் தமிழகத்திற்குள் நுழைந்தபோதே, காக்கையை முன்னோராகப் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் பரவியது.
சங்க இலக்கியங்களான புறநானூற்றிலோ, அகநானூற்றிலோ காக்கையை முன்னோராகக் கருதி வழிபட்டதாக எந்த ஒரு சான்றும் இல்லை. தமிழர்கள் காக்கையைத் தன் குடும்பத்தில் ஒரு பறவையாகவும், விருந்தினரின் வருகையை முன்கூட்டியே சொல்லும் ஒரு தூதுவனாகவுமே பார்த்தனர். காக்கை வீட்டின் முன் கத்தினால் விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று தமிழர்கள் நம்பினார்கள்.
குறுந்தொகையில், வெள்ளிவீதியார் என்ற சங்க காலப் பெண் புலவர், தலைவனின் வருகையைக் காக்கை முன்கூட்டியே கத்தி அறிவித்ததால், அதற்கு நெய்யில் சமைத்த சோற்றை நன்றிக்கடனாக வைப்பதாகப் பாடியுள்ளார். இது அன்பின் வெளிப்பாடே தவிர, பிதுர் வழிபாடு அல்ல. அதுமட்டுமல்லாமல், பழந்தமிழர்கள் கடலில் திசை தெரியாமல் கப்பல் தவிக்கும் போது, கரையைத் தேடிக் கண்டுபிடிக்கக் கரை காட்டும் பறவையாகக் காக்கைகளைப் பயன்படுத்தினர். காக்கை பறக்கும் திசையை வைத்தே கரை இருக்கும் பகுதியை அறிந்து பயணம் செய்தனர்.
எனவே
எனவே காக்கைகளை ஒரு பறவையாக மட்டுமே பார்ப்பது சாலச் சிறந்தது.
M.Porkodi Nangai
Tamil writer & Author

Comments
Post a Comment