அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் 🙏🏻
நம் தமிழ் நிலத்தின் முதன்மைக் கடவுளாக, குறிஞ்சி நிலத்துச் சேயோனாக விளங்கும் முருகப்பெருமானைப் பற்றியும், நக்கீரர் பாடிய அறுபடை வீடு (திருமுருகாற்றுப்படை) பற்றியும் பல காலமாக நம்மிடையே சில தவறான புரிதல்கள் உலா வருகின்றன.
வரலாற்று முறையிலும், கழக இலக்கியச் சான்றுகளின் படியும் முருகன் உண்மையில் யார்? அவர் தனித்தமிழ் கடவுளா ?
அறுபடை வீடு என்பது உண்மையில் என்ன?
நக்கீரர் இயற்றிய ‘திருமுருகாற்றுப்படை’ என்ற நூலில் இருந்துதான் "அறுபடை வீடு" என்ற குறியீடு உருவானது.
கழக இலக்கியத்தில் "ஆற்றுப்படுத்துதல்" என்றால் 'வழிகாட்டுதல்' என்று பொருள். மக்கள் நல்வாழ்வு பெற முருகன் அருள்செய்யும் ஆறு இடங்களை நோக்கி நக்கீரர் மக்களை ஆற்றுப்படுத்தினார் (வழிகாட்டினார்). இந்த "ஆறு ஆற்றுப்படை வீடுகள்" என்பதுதான் காலப்போக்கில் மருவி "அறுபடை வீடு" என்று பேச்சுவழக்காக மாறியது.
நக்கீரர் உண்மையில் தெய்வானை திருமணத்தை எழுதினாரா?
இன்று பலரும் திருப்பரங்குன்றம் என்றாலே அது இந்திரன் மகள் தெய்வானையை முருகன் திருமணம் செய்த தலம் என்று புராணக் கதைகளைக் கூறுகிறார்கள். ஆனால், நக்கீரர் தான் கைப்பட எழுதிய பாடலில் ‘தெய்வானை’ என்ற வடமொழிப் பெயரை எங்குமே பயன்படுத்தவில்லை!
அவர் பயன்படுத்திய தூய தமிழ்ச் சொல்:
"மறுவில் கற்பின் வாணுதல் கணவன்"
இதன் நேரடித் தமிழ்ப் பொருள்: "குற்றமற்ற கற்பினையும், ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய ‘தெய்வீகப் பெண்ணின்’ கணவன்" என்பதுதான்.
தமிழர்களின் வீரத்தின் குறியீடான "வெற்றித் தெய்வம்" ( கொற்றவை) என்ற பொருளில்தான் நக்கீரர் இதைப் பாடினார்.
ஆனால், 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் போன்ற பிற்கால உரையாசிரியர்கள், வடமொழிப் புராணங்களின் செல்வாக்கினால், அந்தத் தமிழ்ச் சொல்லுக்கு "இந்திரன் மகள் தெய்வயானை" என்று தவறாகப் பொருள் மாற்றி எழுதிவிட்டார்கள்.
கழக இலக்கியங்கள் காட்டும் "தனித்தமிழ் முருகன்"
தொடக்ககால கழக இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை போன்றவற்றில் முருகன் ஆரியக் கலப்பற்ற, தூய தமிழர்களின் "குறிஞ்சி நிலத் தலைவனாக" மட்டுமே விளங்கினார்.
* நற்றிணை (பாடல் 34):
இதில் முருகன் எந்தப் பெண்ணுடனும் துணையாகக் காட்டப்படவில்லை. வேல் ஏந்தி, கடம்ப மரத்தின் கீழ் அமர்ந்து, மக்களின் குறைகளைத் தீர்க்கும் தனித்த பெரும் தமிழ் இறைவனாகவே காட்சியளிக்கிறார்.
அகநானூறு (பாடல் 22):
முருகன் மலைகளில் வாழும் ஒரு இயற்கை தெய்வம். தமிழ் மக்கள் அவனுக்கு "வெறியாட்டு" ( அருள்வந்து ஆடுதல்)
* ஆடி, தினை மாவும் தேனும் படைத்து, இயற்கை வழியில் தனித்துக் கொண்டாடினர்.
வரலாறு எப்படி மாற்றப்பட்டது?
கழக காலத்தின் இறுதிப் பகுதியிலும், அதற்குப் பின்னரும் தமிழகத்தில் வடமொழி மற்றும் வைதீகக் கலாச்சாரம் தீவிரமாகப் பரவியது. தமிழர்களின் தனிப் பெருங் கடவுளான முருகனைத் தங்களுக்குள் இழுத்துக் கொள்ள, வடநாட்டு "ஸ்கந்தன் / கார்த்திகேயன்" கதையோடு இணைத்து, 'கந்த புராணம்' போன்ற நூல்களைப் பிற்காலத்தில் எழுதினார்கள்.
அப்போதுதான் தனித்திருந்த முருகனுக்கு இரு மனைவிகள் என்ற கதையும், தேவசேனா (தெய்வானை) திருமணப் புராணங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
முருகன் காலங்காலமாக தனித்தமிழ் கடவுளாக, இயற்கையின் வடிவமாக, குறிஞ்சியின் தலைவனாகத்தான் இருந்தார். பிற்கால உரையாசிரியர்களும், புராணக் கதை எழுத்தாளர்களும்தான் மக்களின் உள்ளத்தை மாற்றி எழுதினார்கள்.
இதனால் தமிழருக்கே உரிய தனித்த அடையாளங்கள் மறைக்கப்பட்டு ஏன் அழிக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம்...
மேலும் புராணக்கதைகளை உண்மெயென்று நம்பி தமிழ் நூல்களில் புகுத்திய கடைக் கழக காலத்திற்கு பிறகு வந்த தமிழர்கள்
தமிழரின் உண்மையைத் தன்மையை இறக்கச் செய்து விட்டனர் என்பது ஆழமான வேதனை!!
----------------------------
குறிப்பு:
1. இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் என் ஆய்வின் புரிதல்களை அடிப்படையாகக் கொண்டவை.
2. கழகம் என்ற சொல் சங்கம் என்பதுதான் ஸங்க என்ற வடமொழிச் சொல்லின் தழுவல் சங்ககாலம் எனும் இடைக்காலத்தில் வந்த சொல்.
கழகம் என்பதே பண்டைய அதற்கேயுரிய தமிழ்ச்சொல்.
Porkodinangai
Tamil writer & Author

குரு வாழ்க குரு நன்றாய் வாழ்க குருவே துணை...
ReplyDelete